அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள், வேலை வாய்ப்பு என பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு, பணி ஒழுங்கு உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1982ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உதவிகள் கிடைக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதிவு செய்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி, விபத்து மற்றும் இறப்பிற்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.